கோட்டூர்., அக்.11
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மழை பெய்ய வேண்டியும், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டியும் பெண்கள் கொடும்பாவி அமைத்து, தீபம் ஏற்றி, கும்மியடித்து நூதன முறையில் வழிபாடு நடத்தினர். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கடைமடைப் பகுதிகளான கோட்டூர், புழுதிக்குடி, பல்லவராயன் கட்டளை, சபாபதிபுரம், சிதம்பரக்கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இதுவரை போதிய தண்ணீர் சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் டிராக்டர்கள் மூலம் உழவு செய்து நேரடி நெல் விதைப்பு மேற்கொண்டுள்ளனர். விதைப்பு செய்து 30 நாட்களுக்கும் மேலாகியும், போதிய மழை பெய்யாததால் நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், மன்னார்குடி அருகே உள்ள புழுதிக்குடி பகுதியில் மழை வேண்டி பழங்கால பாரம்பரிய வழிபாட்டு முறையான கொடும்பாவி வழிபாடு நடைபெற்றது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் கொடும்பாவி அமைத்து, அதில் தீபம் ஏற்றி, பெண்கள் ஒன்றுகூடி கும்மியடித்துப் பாடல்கள் பாடி வழிபட்டால் மழை பெய்யும் என்பது அப்பகுதியில் நிலவும் பாரம்பரிய நம்பிக்கையாகும்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை மற்றும் தண்ணீர் கிடைத்ததால் இந்த வழிபாடு நடைபெறாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்று கொடும்பாவி அமைத்து, தீபம் ஏற்றி, கும்மியடித்துப் பாரம்பரியப் பாடல்களைப் பாடி வழிபட்டனர். விவசாயம் செழிக்கவும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பவும், தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களைக் காப்பாற்றவும் வேண்டி இந்த நூதன வழிபாடு நடைபெற்றது.
கடைமடைப் பகுதிகளுக்கு பாசன நீர் கிடைக்காததுடன், மழையும் பெய்யாமல் இருப்பதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். எனவே, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
