தாய்ப்பாசம் குறித்து மாணவர்களின் கேள்விகளுக்கு நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்
திருவாரூர்., அக் 11-
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில், தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவில் நினைவுக் கட்டிடம் அமைத்துள்ள அமிர்தீனை, நாகங்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அமிர்தீன் தனது தாயின் நினைவாகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அவரது சமாதியுடன் அமைத்துள்ள இந்தக் கட்டிடம், ‘தென்னிந்தியாவின் தாஜ்மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டிடத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 60 மாணவ, மாணவிகள் அமிர்தீனைச் சந்தித்து, தாயின் நினைவாக இத்தகைய கட்டிடத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது, கட்டுமானப் பணிகளின்போது மனதை நெகிழச் செய்த சம்பவங்கள் என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த அமிர்தீன், தாய் என்பவர் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானவர் என்றும், நினைவுக் கட்டிடம் அமைக்கும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது தாயின் நினைவுகள் தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தாய்ப்பாசம் குறித்துக் கவிதை வாசித்த மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்தச் சந்திப்பு மாணவர்களிடையே தாயின் மீதான அன்பையும் மரியாதையையும் உணர்த்தும் வகையில் அமைந்தது.
