தாராபுரம்,
சமவாய்ப்பு, சமநீதி மற்றும் ஜனநாயகத்தை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) சார்பில் ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் “மக்களை சந்திக்கும் நடைபயண பரப்புரை இயக்கம்” நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக தாராபுரம், குண்டடம், மூலனூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, கட்சியின் கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.
இந்த இயக்கத்தின் மூலம், வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும், பினாமி பெயர்களில் உள்ள அரசு நிலங்களை மீட்டு நிலமற்ற உழவர்களுக்கு வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மாணவ-மாணவிகளுக்கு தரமான இலவச கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
மேலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்தல், விவசாயிகளுக்கு கட்டுப்படியான ஆதார விலை நிர்ணயம், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துதல், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துதல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
உள்ளூர் கோரிக்கைகளாக, தாராபுரம், குண்டடம், மூலனூர் ஒன்றியங்களில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்றும், தாராபுரம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ஐ.சி.யு., எலும்பியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளிகளுக்கான பேட்டரி வாகனம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை மருத்துவ வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் குறித்து மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் லட்சுமணன், தாராபுரம் தாலுகா செயலாளர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தாலுகா தலைவர் ரஞ்சித் குமார், தாராபுரம் தாலுகா குழு உறுப்பினர் டாக்டர் திருமலைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பூங்கொடி, தாலுகா குழு உறுப்பினர்கள் செல்வராஜ், தர்மன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் நடைபயணத்தின் போது பொதுமக்களிடம் விளக்க உரையாற்றுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா குழு மற்றும் திருப்பூர் புறநகர் மாவட்டக் குழு தெரிவித்துள்ளது.
