காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
இந்தத் திருக்கோயிலுக்குச் சொந்தமான 6.50 ஏக்கர் நிலம் திருக்கோயிலுக்குப் பின்புறம் பயன்பாடின்றி இருந்தது. இந்த இடத்தினைப் பயன்பாட்டுக் கொண்டுவந்து பலன்தரும் மரக்கன்றுகளை நட்டு பசுமைக்காடு நந்தவனமாக உருவாக்க நிர்வாக அதிகாரியால் திட்டமிடப்பட்டு திருக்கோயில் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு முள்வேலி அமைக்கப்பட்டது. நீர் தேவைக்காக இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் குட்டை போன்று இருந்த இடம் மழைநீர் சேகரிப்பதற்காக தூர்வாரப்பட்டு குளமாக்கப்பட்டது.
பிறகு விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் இணைந்து வேங்கை, தேக்கு, மகோகனி, நாவல், மகிழம், வேம்பு மரக்கன்றுகள் திருக்கோயில் நிர்வாகத்தால் நடப்பட்டன.
கடந்த மாதம் மாண்புமிகு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் . தென்னரசு அவர்கள் வல்லக்கோட்டைக்கு வந்து வேங்கை, மகோகனி, மா, தென்னை முதலிய மரக்கன்றுகள் நட்டு வைத்தார். கடந்த வாரம் 100 இலுப்பை மரக்கன்றுகளும் 300 வேங்கை மகோகனி மரங்கன்றுகளும் நடப்பட்டன. இதுவரை 1700 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையான இன்று மேலும் 300 மரக்கன்றுகள் நட்டு மொத்தம் 2000 மரக்கன்றுகள் நடும்பணி நிறைவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு அவர்கள் கலந்து கொண்டு வில்வம், கடம்பு, வன்னி, புன்னை, நெல்லி, அத்தி முதலிய நட்சத்திர மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பிறகு கடந்த 4 மாதங்களாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மரக்கன்றுகள் நட்ட பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் சார்பில் திருக்கோயிலுக்கு வருகை தந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கேசரி, கதம்ப சாதம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், தவெக நிர்வாகி கார்த்தி, விதைகள் தன்னார்வ அமைப்பு சரண் மற்றும் நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
