மன்னார்குடி., ஜூலை.31

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரிய குருவாடி கிராமத்தில் பாலைவனமாக மாறி வரும் காவிரி டெல்டாவை பாதுகாக்க கர்நாடகாவிடம் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன் தலைமையில் பெண்கள் கும்மியடித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது காவிரி டெல்டாவில் 13 லட்சம் ஏக்கர் பாலைவனமாக காட்சியளிக்கிறது கோடை பருத்தி பயிர்கள் அழிந்து வருகிறது. நிலத்தடி நீர் பறிபோய் ஒட்டுமொத்தமாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறுவையை இழந்து விட்டோம். தற்போது சம்பாவும் கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் விவசாயிகள் தற்கொலைகள் தீவிரமடையுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தியை இழந்து ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் பேராபத்து உள்ளது.

இந்நிலையில் வினாடிக்கு 3500 கன அடி தண்ணீரை கர்நாடகம் பிலிகுண்டுவில் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனை நிறைவேற்ற கர்நாடகம் சட்டவிரோதமாக மறுத்துள்ளது. நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் மூலம் அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்க கர்நாடக முதலமைச்சர் முயற்சி எடுக்கிறார். உச்ச நீதிமன்றம் இணையான அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடகம் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க முன்வர வேண்டும்.

அரசியல் அமைப்பு சட்டத்தை சீர்குழைக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது . அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி கர்நாடகம் செயல்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது.

தமிழகத்தை அழிக்க துடிக்கும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு துணை போக கூடாது. ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். உடனடியாக தண்ணீரைப் பெற்று நிலத்தடி நீரையாவது பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .

பெண் விவசாயிகள் மாரடித்து போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். விவசாய தொழிலாளர்கள். பெண்கள் வேலைவாய்ப்பை முற்றிலும் இழந்துள்ளனர். உடனடியாக ஆணையும் உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியை கோர வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *