திருப்பூர்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம், சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சூரியநல்லூர் குக்கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) மூலம் 2017–2018 ஆம் ஆண்டில் அரசு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படாததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மனுவில், அரசு நிதியில் கட்டப்பட்ட இக்கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால், திருமணம், கிராம சபைக் கூட்டம், சமூக நிகழ்வுகள் மற்றும் அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நோக்கம் கிராமப்புறங்களில் நீடித்த பொதுச் சொத்துகளை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகும். அதேபோல், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் படி, பொதுச் சொத்துகளை பாதுகாத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். இந்நிலையில், அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடின்றி கிடப்பில் விடப்பட்டிருப்பது நிர்வாக அலட்சியமாகவும், பொதுநிதி விரயமாகவும் கருதப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
எனவே, 2017–2018 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சமுதாயக் கூடம் இதுவரை பயன்பாட்டிற்கு வராததற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், கட்டிடத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பணி, நிதி ஒதுக்கீடு, நிறைவு அறிக்கை மற்றும் ஒப்படைப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து, அலட்சியம் அல்லது முறைகேடு இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
