தேக்கடி, ஜூலை 17:

பெரியார் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.

பெரியார் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் தேக்கடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே அமைந்துள்ளது. தேக்கடி ஏரியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை திறவை வாய்க்காலாக உள்ளது. குமுளி, தேக்கடி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த திறவை வாய்க்காலில் நேரடியாக கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக நீர்வளத் துறையினர் கேரள அரசிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் குமுளி ஊராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலப்பதற்காக ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்றியிருந்தாலும், கழிவுநீர் கலப்பது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, முல்லைப் பெரியாறு அணை நீரை குடிநீராக பயன்படுத்தும் கூடலூர், கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கழிவுநீர் கலந்த தண்ணீர் விநியோகிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தேக்கடியில் ஷட்டர் அருகே கழிவுநீர் கலக்கும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“திறவை வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால், இந்த நீரை பயன்படுத்தும் தமிழக எல்லையோர மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் பேரில், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குமுளி ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *