சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் லியோமுத்துவின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, கல்விக்குழுமங்களின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டாக்டர் சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சரத்பாபு ஏழுமலை கலந்து கொண்டார்.

நினைவேந்தலை முன்னிட்டு, ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகம் அருகிலுள்ள ஏரி தூர்வாரப்பட்டு, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும், ஏரியைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சாய்பிரகாஷ் லியோமுத்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கல்வி நிறுவனர் லியோமுத்துவின் கனவு இன்று பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs), தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி மையங்கள், சிறப்புத் திறன் மையங்கள், தேசிய மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்களுடனான இணைப்புகள் உள்ளிட்ட வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வரும் கல்வியாண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்காக ரூ.8 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சம்பத் வீரராகவன், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே. ராஜா, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. பழனிகுமார், இயக்குநர் டாக்டர் ஆர். பழனியாண்டி, கல்விக்குழும அறங்காவலர்கள் கலைச்செல்வி லியோமுத்து, சதீஷ்குமார், முனுசாமி, பாலசுப்ரமணியம், முதன்மை தகவல் அதிகாரி நரேஷ்ராஜ், முனைவர் எ. இராஜேந்திரபிரசாத், முனைவர் க. மாறன், எல். அருணாச்சலம், சி.ஆர். ரெனிராபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *