அரக்கோணம், ஜூலை 8: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சி வார்டு எண் 3-இல் உள்ள கணேஷ் நகரில், MRF நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள புதிய பூங்கா கட்டுமானப் பணிக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படவுள்ள இந்தப் பூங்காவில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதை, ஜங்கிள் ஜிம் (Jungle Gym), மரக்கன்றுகள் நடுதல், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், கிரானைட் இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கைச் சூழலுடன் கூடிய பொழுதுபோக்கு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வு பெறும் இடம் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் MRF நிறுவனத்தின் பொது மேலாளர் ஜான் டேனியல், அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் ஆனந்தன், நகரமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
