மன்னார்குடி, ஜூலை 6: விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தவெக அரசு, தேர்தலுக்கு முன்பாக 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகைக்கு ஏற்ப மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.

இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாஜக நிர்வாகி ஒருவர் சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு, விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.