மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையத்திற்கான ஆய்வு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் ரயில்வே துறையின் ஏடிஆர்எம், தலைமைப் பொறியாளர், கமர்ஷியல் மேனேஜர், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் (மேயர் பொறுப்பு) நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு ரயில்வே துறை சார்பாக எல்.என். ராவ் – கூடுதல் பிரிவு ரயில்வே மேலாளர் கணேஷ் – மூத்த பிரிவு வணிக மேலாளர் சூரியமூர்த்தி – மூத்த பிரிவு மின்பொறியாளர் (மத்திய) சிவா – மூத்த பிரிவு செயல்பாட்டு மேலாளர்
அமல் செபாஸ்டியன் – மூத்த பிரிவு மின்பொறியாளர் (பொது)
ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் : மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு பயணிகள் வசதி, சாலை இணைப்பு மற்றும் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளில் ரயில்வே, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய மூன்று துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என தீர்மானிக்கப்பட்டது.


கூடல்நகர் மேம்பாலம் இருபுறங்களிலும் உள்ள இணைப்புச் சாலைகள் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றை மேம்படுத்தி ஒப்படைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மின்விளக்குகள் அமைக்கும் பணியை மாநகராட்சி அதே காலத்தில் மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது. ரயில்வே துறை சாலை விரிவாக்கம் மற்றும் விளக்குகள் அமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளது.

டிசம்பர் இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும் என உறுதி செய்யப் பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து டிசம்பர் கடைசி வாரத்தில் மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கூடல்நகர் ரயில் நிலையத்தில் ஐந்து ரயில்கள் நிறுத்தம் பெறுகின்றன – மதுரை-திண்டுக்கல் பயணிகள், மதுரை-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-குருவாயூர் உள்ளிட்ட ரயில்கள். இவை படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், பகல் நேர ரயில்களான பாண்டியன், வைகை, இன்டர்சிட்டி, அந்தியோதயா, விழுப்புரம் பயணிகள் ரயில்கள் ஆகியவை கூடல்நகரில் நிறுத்தம் பெற வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஆறு ரயில்களுக்கு 12 நிறுத்தங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையத்தில் காவல்துறை புறநகர் நிலையம் அமைப்பது, வாகன நிறுத்தம் வசதி உருவாக்குவது ஆகியவையும் தேவையானவை என வலியுறுத்தப் பட்டது.

அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் கூடல்நகர் ரயில் நிலையம் மதுரையின் இரண்டாவது ரயில் முனையமாக முக்கிய பங்கு வகிக்க இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. தற்போது மதுரை ரயில் நிலையத்தில் ரூ 347 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை வடக்கு பகுதியைச் சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில் செல்லூர் பகுதியில் இருந்து கூடல்நகர் ரயில் நிலையத்திற்கான மேம்பாலம் அமைக்கும் திட்டமும் விவாதிக்கப்பட்டது.

மேலும், மதுரை சோழவந்தான் – செக்கானூரணி – திருமங்கலம் வழியாக 28 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச் சாலை அமைக்கும் திட்டமும் முன் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரக்கு ரயில்கள் முக்கிய ரயில் நிலையம் வழியாக செல்லாமல் புறவழியாகச் செல்வதற்கு வசதி ஏற்படும்.

இதனால் நேர நெருக்கடி குறையும், மேலும் பயணிகள் ரயில்களை அதிக அளவில் இயக்கும் வசதி கிடைக்கும் என கூறப்பட்டது.தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியுடன் இணைந்து கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளில் இருந்து வரும் சரக்கு ரயில்களுக்கு இது பெரும் நன்மை அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.

மதுரை ரயில்வே வளர்ச்சிக்கான இரண்டு முக்கிய திட்டங்கள் — கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்றுதல் மற்றும் சரக்கு ரயில் களுக்கான புறவழித்தடம் அமைத்தல் — ஆகிய இரண்டுக்கும் தேவையான திட்டமிடல் மற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது..