அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில், அரசு நூலகம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடமாக பயன்படுத்தப்பட்ட நிலம் தனிநபரின் பெயரில் பட்டா வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2005-6 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு 1.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் தொடர்ந்து அரசு நூலகமும் இயங்கி வந்தது.

இதே இடத்தை தங்களுடையது என கூறி, 2023 ஆம் ஆண்டு சின்னசாமி என்ற நபர் கிரயமாக பெற்று, பின்னர் தனது மகன் மகேந்திரனின் பெயருக்கு மாற்றி வைத்ததாக அறியப்படுகிறது.

இந்த தகவல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பொதுமக்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, அந்தக் கிரயத்தை ரத்து செய்யக் கோரினர்.

இதையடுத்து வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட பட்டாவை ரத்து செய்ய ஆணையிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் கடந்த ஆறு மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் கேத்துரெட்டிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்

பேச்சுவார்த்தையின் முடிவில், முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா 15 நாட்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இந்த நிகழ்வினால்
இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேட்டி: சபரி,
சமூக ஆர்வலர், கேத்துரெட்டிப்பட்டி.