தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்த நிலையில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர் இரவு 7.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவில்பட்டி வருகிறார்.
அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி இளை யரசனேந்தல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில்பட்டி மேற்கு நகர திமுக அலுவலகத்தையும் அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முழு உருவச்சிலையையும்
முதலமைச்சர் முகஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் க.கனிமொழி எம்பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகசெயலாளரும். சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தெற்கு மாவட்ட திமுகசெயலாளரும் கால் நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் இருந்து காரில் புறப்படும் முதல்வருக்கு நெல்லை மாவட்ட எல்லையான சுங்கை கொண்டானில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர்.அங்கிருந்து அரியநாயகிபுரம் செல்லும் முதல்வர் முகஸ்டாலின் அங்கு இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இன்று 29ம் தேதி காலை 9 மணிக்கு அரியநாயகிபுரத்தில் இருந்து
புறப்படும் முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு ஆலங் குளத்தில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து அத்தியூத்து, சுரண்டை, சாம்பவர் வடகரை, வழியாக காலை 10 மணிக்கு தென்காசி மாவட்டம். சிவநல்லூர் சென்று அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை திறந்து வைக்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு தென்காசி இலத்தூர் விலக்கு ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி அருகே நடக்கும் அரசு பிரமாண்ட விழாவில் முதலமைச்சர் முகஸ்டாவின் பங்கேற்கிறார்.
இதற்காக அந்த பகுதியில் பெரிய மைதானம் தேர்வு செய்யப்பட்டு பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு விழாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே முடிந்த திட்டப் பணிகளை துவக்கி வைத்து பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு பலகோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்படும் முதலமைச்சர் முகஸ்டாலின் 12.45 மணிக்கு ஆய்க்குடி அமர் சேயா சங்கம் சென்று உரையாடுகிறார் இதையடுத்து 1.30 மணிக்கு குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் முதலமைச்சர் மதிய உணவுக்குபின் மாலை 5 மணிக்கு அங்ருந்து சாலை மார்க்கமாக மதுரை புறப்படும் முதலமைச்சர் இரவு மதுரை சென்று அங்கு தங்கி ஓய் வெடுக்கிறார்.
மறுநாள் 30ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் முகஸ்டாவின் தேவர் ஜெயத்தியை முன்னிட்டு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து கிறார்.தொடர்ந்து தெப்பக்குளம் சென்று மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரயாதை செலுத்துகிறார். பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.
முதலமைச்சரின் தென்காசி மாவட்ட சுற்றுப்பயணத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரும் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா. ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஈ.ராஜா எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
முதலமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழா சிறப்பாக அமையவும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் உரிய நடவடிக்கைகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ.அரவிந்த் மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
