திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா, கல்லூரியின் பத்தாம் ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.கலைவாணி, தொழில்நுட்பக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் இ.எம்.சீனிவாசன், கல்லூரி முதல்வர்
எல்.ஜான் லூயிஸ், அண்ணா பல்கலைகழக உதவி இயக்குனர் பத்திரிகை தொடர்பு நேச.கலையரசன், வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் செய்த அறிவிப்பின் படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரி கலைத் திருவிழா என்ற பெயரில் உயர்கல்வி பயிலும் மாணவ- மாணவியர் இடையே 32 வகையான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூபாய் இரண்டு லட்சம், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம், கல்லூரி கல்வி இயக்கம் வாயிலாக வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், தொழவூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், கல்லூரி கலைத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் சுமார் 857 மாணவ- மாணவியர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 230 மாணவ – மாணவியர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழாவும், புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் ஆகிய தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களின் கீழ் பயன் பெறும் அனைத்து மாணாக்கர்களுக்கும் பாராட்டு விழாவும் மற்றும் கல்லூரி ஆண்டு விழாவும் முப்பெரும் விழாவாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பா.கலைவாணி கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்கள், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கூடுதல் இயக்குநர் இ.எம்.சீனிவாசன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார், இவ்விழாவில் அண்ணா பல்கலை கழக உதவி இயக்குனர் பத்திரிகை தொடர்பு நேச.கலையரசன், வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர், தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கூடுதல் இயக்குநர் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள். முன்னதாக வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எல்.ஜான்லூயிஸ் வரவேற்புரையாற்றினார். விழாவில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் பா.சுசீலா ஆண்டறிக்கை வாசித்தார்,

விழா நிறைவில் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன் நன்றியுரை ஆற்றினார். விழாவினை கல்லூரியின் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் மாணாக்கர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.