வி.தொ.ச போராட்டம் அறிவித்திருந்த நிலையில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை
துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஒ. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மக்களின் விவசாய நிலங்களுக்கும் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பாதை வேண்டி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் 27-10-2025 அன்று ஒ.கிருஷ்ணாபுரம் கைகாட்டியில் பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்த போவதாக உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளரிடம் மனு அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.இதில் துறையூர் வட்டம் ஒ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு விவசாய நிலங்களுக்கு மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பாதை அமைத்து தரவும்,450 ஏக்கர் விவசாய நிலங்கள் வனவிலங்குகளால் பாதிக்காமல் இருக்க முள்வேலி அமைத்திடவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக மேற்படி இடத்தை வருவாய் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், வனத்துறை சார்பில் 27-10-2025 அன்று தலப்பார்வை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது என தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் ஸ்ரீராம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார்,வி.தொ.ச. மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் து.முத்துக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் முத்துகுமார், மாவட்ட செயலாளர் நடராஜன், ஒன்றிய தலைவர் கர்ணா, பொல்லான், குமார், ராஜசேகரன் உள்ளிட்ட வி.தொ.ச.நிர்வாகிகள் மற்றும் காவல்துறை, நீர்வளத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
