குண்டடத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்பு

தாராபுரம், குண்டடத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் ரன்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தாராபுரம் தாலுகா, குண்டடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். இதில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் ரன்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டு, சிறப்புரையாற்றினர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

இம்முகாமில் பல்வேறு வகை சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், பொதுமருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எழும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தைநலம், இருதயத்துறை, நரம்பியல்துறை, தோல் சிகிச்சை, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, நுரையீரல் நோய்சிகிச்சை, நீரிழிவுநோய் சிகிச்சை, சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 11 முகாம்கள் நடைபெற்று 16,520 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1,152 நபர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனைகளும், 1,082 நபர்களுக்கு இருதய பரிசோதனைகளும், 1,673 நபர்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

பின்னர், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு தேசிய அட்டையாள அட்டை, பேட்டரி வீல்சேர், மாதாந்திர உதவித் தொகையினையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்ளையும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அடையாள அட்டைகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை மற்றும் முழு உடல்பரிசோதனை அறிக்கையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, மாநகர நலஅலுவலர் முருகானந்தம், குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகரன் மற்றும் மருத்துவர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.