பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2025) பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். அன்று முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சிகிச்சையினை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு இலவச தரமான மருத்துவ சிகிச்சையினை அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து வழங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இம்முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றது. மேலும் பொதுமக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர, முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் எந்த விதமான சிகிச்சை பெற வந்திருக்கிறார்கள் என்று கேட்டு அறிந்து அந்த சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவரின் அறைக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்றும், முகாமிற்கு வரும் பொதுமக்களின் தகவல்களை முறையாக பதிவேடுகளில் பதிவு செய்கிறார்களா என்றும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இன்றைய முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த 7 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளையும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.14 லட்சம் மதிப்பிலான மோட்டர் பொருத்தப்பட்ட சக்கர வண்டிகளையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், தேசிய தொழுநோய் திட்டத்தின் மூலம் தொழு நோய் பதிக்கப்பட்ட 7 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், குன்னம் வட்டாட்சியர் சின்னத்துரை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி, பேரூராட்சி தலைவர் ஜாஹிர் உசேன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
