மதுரையில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மதியத்திற்கு மேல் திடீரென வெயிலின் தாக்கம் குறைந்தது. வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணி முதல் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

நேரம் செல்ல, செல்ல பலத்த மழை யாக கொட்டியது. குறிப்பாக பெரி யார் பஸ்நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா பஸ்
நிலையம், ஆனையூர், மாட்டுத் தாவணி, புதூர், கே.கே.நகர், கடச்சனேந்தல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் ஆறுகள் போன்று மாறி, வெள்ளக்காடாக காட்சியளித்தன.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தண்ணீர் செல்ல வழியின்றி குளம்போல தேங்கி நின்றது. வாகனங்கள் தத்தளித்த படி சென்றன. மாலையில் பள்ளி, கல்லூரி விடும் நேரத்தில் பெய்த இந்த மழையால் நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு சென்று திரும்பியவர்கள், மாணவ – மாணவியர், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

இரவு வரை தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் மழை தூறிக் கொண்டே இருந்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து மின் தடையும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதவிர நகரில் பாதாள சாக்கடை, குடிநீருக்காக தோண்டிய பள்ளங்களில் பல இடங்களில் வாகனங்கள் சிக்கின.

2 மணி நேரம் பெய்த மழைக்கே மதுரை மாநகர் திணறி விட்டது, இதே போன்று மதுரை மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.