செங்குன்றம் தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா. 1000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்த மாணவர்கள். தாய், தந்தையை காட்டிலும் தன்னலமற்ற சேவையாற்றுபர்கள் ஆசிரியர்கள் என ஓய்வு பெற்ற நீதிபதி ஆசிரியர்களுக்கு புகழாரம்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில் “குரு சித்திரம் 2K25” என்ற தலைப்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்களின் சேவையை போற்றும் வகையில் மாணவர்கள் தங்களது உணர்வுகளை ஓவியங்களாக வெளிப்படுத்தி வரைந்தனர்.

1000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவைகளையும், மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ஊக்கத்தையும், அர்ப்பணிப்பு பணிகளை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தினர்.

இதில் கல்லூரியின் நிர்வாகியும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெங்கட்ராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரிப்பன் வெட்டி மாணவிகளின் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற ஆசிரியர் தின விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில் மாணவிகள் சிலம்பம், நடனம் என தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி ஆசிரியர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆசிரியர்களின் சேவை என்பது தன்னலமற்ற சேவை எனவும், மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதலிடம் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் வயது முதிர்ந்த பெற்றோரை அக்கறையுடன் கவனித்து கொள்வார்கள் என்ற சுயநலம் சற்று கலந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்த்து வருவதாகவும், ஆனால் ஆசிரியர்கள் எந்தவித தன்னலமும் பாராமல் தங்களிடம் கல்வி பயிலும் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்கிட அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவதாக புகழாரம் சூட்டினார்.

மாணவர்கள் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதாலேயே ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள் எனவும், அதனை மாணவர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு செங்குன்றம் சுற்றுப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர்களின் சேவையை பாராட்டும் வகையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.