கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (72), இவர் ஐ டி ஐ முடித்துவிட்டு, எம் காம், எம்பிஏ படிப்பை முடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டு மகள்களுக்கும் தற்பொழுது திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் மனைவியுடன் வடலூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் ஓய்வு பெற்று 10 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படிப்பின் மீது ஏற்பட்ட ஆசை காரணமாக சீர்காழி அருகே உள்ள சீனிவாசா சுப்புராயா அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வடலூர் பகுதியில் இருந்து தினந்தோறும் புத்தூர் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிக்கு பேருந்து மற்றும் ரயிலில் வந்து செல்கின்றார். இவர் தினந்தோறும் சுறுசுறுப்பாக மற்ற மாணவர்களைப் போல் தோளில் புத்தகப் பையை சுமந்து கொண்டு கையில் மதிய உணவை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு உரிய நேரத்தில் வந்து செல்கின்றார்.

மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போதும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்து விட்டு காலை 9 மணிக்கு சரியாக கல்லூரிக்கு வரும் அவர் மாலை 5 மணி அளவில் கல்லூரி முடித்துவிட்டு மீண்டும் அவரது ஊரான வடலூர் பகுதிக்கு செல்கின்றார்.

இவருடன் பழகும் மற்ற மாணவர்கள் அவரை தாத்தா என்று அன்புடன் அழைக்கின்றனர். தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை இவரை ஆட்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழும் இவரை கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டுகின்றனர்.