பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்காக சிபில் (CIBIL) மதிப்பெண் அடிப்படையாகவே பயன்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு கூட்டுறவு துறை உத்தரவை தமிழக அரசு மீள் பரிசீலிக்க வேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
மே 26, 2025 அன்று, தமிழ்நாடு கூட்டுறவு துறை பதிவாளர், விவசாயிகளுக்கு பயிர் மற்றும் பிற கடன்கள் வழங்கும் போது, வணிக வங்கிகள் பின்பற்றும் நடைமுறையை ஒத்த வகையில் சிபில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிராகவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிபில் மதிப்பெண் – வேளாண் கடனுக்கு பயன்படுமா?
வேளாண்மை என்பது இயற்கையைச் சார்ந்த தொழிலாகும். விவசாயிகள் தங்கள் முதலீட்டை வெளிநிலத்தில் செலுத்தி, பருவநிலை மாற்றங்கள், இயற்கை பேரிடர்கள், இடுபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சில மாதங்கள் கழித்து மட்டுமே திருப்பிச் சம்பாதிக்கக்கூடிய சூழலில் உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலைகளில் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாகும். இதனால் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகும். இதனைத்தான் சிபில் மதிப்பெண் குறையாகக் காரணமாக காட்டி, மீண்டும் கடன் வழங்க மறுப்பது, விவசாயிகளை கடும் பாதிப்பிற்குள்ளாக்கும்.
மத்திய நிலைப்பாட்டுக்கும் முரண்
மத்திய அரசை நோக்கி, “விவசாயக் கடன்களுக்கு சிபில் மதிப்பெண் அடிப்படையை நீக்கவேண்டும்” என நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் கோரிக்கைகள் வைக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் இதற்கு மாறாக சிபில் மதிப்பெண் கட்டாயம் என நிர்ணயிக்கப்படுவது பின்னடைவை உருவாக்கும்.
மாற்று வழிகள் என்ன?
முதலில், சிபில் மதிப்பெண் அடிப்படையில் விவசாயத்தில் ஏற்பட்ட இழப்புகளை முறையாக மதிப்பீடு செய்து, நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். அதன்பின் தான், விவசாயிகளின் நிதி நிலை சீராகி சிபில் மதிப்பெண் இயற்கையாகவே மேம்படும்.
முதல்வரின் தலையீடு அவசியம்
இத்தகைய முறையை நிராகரித்து, வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் மதிப்பெண் கட்டாயத்தை விலக்க, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு. ஞானமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
