கும்பகோணம்: சமூக நீதி மற்றும் பகுத்தறிவில் ஆழமான நம்பிக்கை கொண்ட தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைக்க முடியாது என்று த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹாஜா கனி தெரிவித்தார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக கும்பகோணம் வருகை தந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

த.மு.மு.க. கிளை முதல் தலைமை வரை இயக்கத்தின் உள்கட்சித் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்தி வரும் பேரமைப்பாகத் திகழ்கிறது. தமிழகத்தின் 72 மாவட்டங்களிலும் அமைப்புத் தேர்தல்கள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, வரும் 18-ஆம் தேதி கோவையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் த.மு.மு.க., இந்தியா முழுவதும் சாதி, மத பேதமின்றி 250 அவசர ஊர்திகளை இயக்கி வருகிறது. இயக்கத்தின் சமூகப் பணிகளைப் பாராட்டி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு அவசர ஊர்திகளை வழங்கினார்.

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் த.மு.மு.க. ஆற்றிய சேவைகள் குறிப்பிடத்தக்கவை. கும்பகோணத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் விஷ்ணுபிரியா உள்ளிட்ட பலரது உடல்களை அவரவர் மத நம்பிக்கைகளின்படி அடக்கம் செய்த மனிதநேயப் பணிகளையும் இயக்கம் மேற்கொண்டுள்ளது.

கும்பகோணத்தை மையமாகக் கொண்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவராக பரக்கத்துல்லா, செயலாளராக அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஜாபர் அலி, பொருளாளராக அப்துல் காதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

13 கோடியே 30 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதே எங்களது முதன்மையான கோரிக்கையாகும். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மேற்கு வங்கத்தில் ஆளும் தரப்பின் தேர்தல் முடிவுகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் பயணிக்கும் தமிழக மக்கள் சமூக நீதி மற்றும் பகுத்தறிவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைக்க முடியாது. இதுபோன்ற அரசியல் மயக்கங்களுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்.

டெல்லியில் இணையச் சேவை மற்றும் மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டு, கோடிக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்தியா காந்தியின் இந்தியாவாகவே நீடிக்க வேண்டும். கோட்சேவின் இந்தியாவாக மாறிவிடக் கூடாது. இதற்கு மக்கள் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்து பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்கள் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா குறித்து பிரதமர் மோடி ஏதாவது கூறியிருந்தால் கேளுங்கள்; அதற்குப் பதில் அளிக்கிறோம்” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, முதலமைச்சர் தனது ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கட்டும்; அதன் பிறகு நாங்கள் எங்கள் கருத்தைத் தெரிவிக்கிறோம் என்றார்.

இவ்வாறு த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹாஜா கனி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *