மன்னார்குடி., அக்.12-
பொதுப்பணித்துறை நீர்வளத்துறையில் பணியாற்றும் 3,407 பணியாளர்கள் மற்றும் விடுபட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் மாவட்டந்தோறும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில செயற்குழுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பணியாளர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கீழ்காவிரி வடிநில வட்டப் பணியாளர்கள் இணைந்து மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில், அரசாணை எண் 233, பொதுப்பணி சி2, நாள் 6.12.2019-ல் குறிப்பிடப்பட்டுள்ள 3,407 பணியாளர்கள் மற்றும் விடுபட்ட பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வயது மூப்பு காரணமாகப் பணியிலிருந்து விலகும் பணியாளர்களுக்கும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கும் உரிய பணி மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்ட சங்க நிர்வாகிகள், நீர்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் செந்தில்குமார், மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.டி. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தகவல் தொழில்நுட்பத் தொடர்பாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
