முத்துப்பேட்டை., அக். 12-

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் குடும்பத்துடன் காவல் நிலையத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்றியும் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலும், எம்.சி.யு. என்ற பெயரில் பொதுமக்களை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

இதைக் கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.

இதற்காக முத்துப்பேட்டை புதுப்பள்ளிவாசல் பகுதியில் இருந்து பாய், தலையணைகளுடன் காவல் நிலையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகரத் தலைவர் அகமது பாட்ஷா தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக், தஞ்சை மண்டலத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் பங்கேற்றனர்.

திருவாரூர் தெற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மர்சூக் அகமது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் பக்ருதீன் அகமது, வழக்கறிஞர் ராஜ் முகம்மது, விம்ஸ் மகளிர் அணியின் மாவட்டத் துணைத் தலைவர் மெகருன்னிசா மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவல்துறையைக் கண்டித்து பாய், தலையணைகளுடன் குடும்பத்தோடு குடியேறச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed