காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது.
திருக்கோயில்களிலும் வீடுகளிலும் பல தெய்வகளின் உருவங்களைக் கொலுவாக வைத்து ஒன்பது நாட்களிலும் சிறப்பான பூஜைகளை மேற்கொண்டு பத்தாம் நாள் உற்சவத்தை நிறைவு செய்வர்.
நவராத்திரி உற்சவத்தின் முதல் மூன்று நாட்கள் பார்வதிதேவியைப் பூஜித்தும் அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமிதேவியைப் பூஜித்தும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியைப் பூஜித்தும் பத்தாம்நாள் மகிஷாசுமர்த்தினி தேவியைப் பூஜித்து வழிபடுவது மரபு.
புராண சிறப்புமிக்க வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலிலும் நவராத்திரி உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் தொடங்கியது.
சஷ்டி மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு இதில் பல்வேறு தெய்வங்களின் திருமேனிகள் வைக்கப்பட்டன. உற்சவர் தேவி கருமாரி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அன்னை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவருக்குச் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. நவராத்திரி முதல்நாள் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானையும் தேவி கருமாரி அன்னையையும் வழிபட்டனர்.
வந்திருந்த பக்தர்களுக்கு கேசரி, சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டன. இதேபோல் நாள்தோறும் தேவி கருமாரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நவராத்திரி உற்சவத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
