கோவை, குனியமுத்தூர் இடையார்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சுஜித்,டிப்ளமோ படிப்பை முடித்து சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த சுஜித், சிறுவயது முதலே ஓவியம் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த கலைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்..

இந்நிலையில் தனது தாயார் அமுதா உதவியுடன் குப்பையாக வீசப்படும் தேங்காயோட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு கைவினைப் பொருட்களை உருவாக்கி வருவதுடன், தனக்குப் பிடித்த கலையை சுயதொழிலாகவும் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறிய அவர், அப்போது குப்பையாக வீசப்படும் தேங்காயோட்டுகளைப் பார்த்தபோது, அவற்றை வீணாக்காமல் கலைப்பொருட்களாக மாற்றலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேங்காயோட்டில் பேனா தாங்கி, சாவிக்கொத்து, கிண்ணங்கள், பூந்தொட்டி, கரண்டி மற்றும் கடவுள் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உருவாக்கத் தொடங்கியுள்ளார்.

அன்றாட பயன்பாட்டில் உள்ள நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் வகையில் தனது படைப்புகளை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.தனது கலைப் பயணம் குறித்து சுஜித் கூறுகையில், சிறுவயதில் ஓவியத்தின் மீது இருந்த ஆர்வம், பின்னர் பொருட்களைப் புதுமையான முறையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும், ஊரடங்கு காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

தேங்காயோட்டை கைவினைப் பொருளாக மாற்றுவதில் பொறுமையும் அதிக கவனமும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.தேங்காயோட்டின் வடிவம், தடிமன் மற்றும் தன்மைக்கு ஏற்ப அதனை முதலில் தேர்வு செய்து, பின்னர் தேவையான வடிவில் வெட்டி, செதுக்கி, மெருகூட்ட வேண்டும். சிறிய தவறு ஏற்பட்டாலும் ஓடு உடைந்து விடக்கூடும் என்பதால் ஒவ்வொரு நிலையிலும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக தேங்காயோட்டில் பொருட்களை உருவாக்குவது குறித்து அவர் கூறுகையில், பயன்பாட்டுக்குப் பிறகு எளிதில் குப்பையாக மாறும் பொருட்களுக்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்க முடியும்.

அதே நேரத்தில், குப்பையாகக் கருதப்படும் பொருட்களுக்கும் ஒரு புதிய பயன்பாட்டை உருவாக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் ஆங்கிலத்தில் தேங்காயோட்டில் செதுக்கியுள்ளார்.

முழுவதும் தேங்காய் ஓட்டில் உருவாக்கி உள்ள . இந்தப் படைப்புக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.பொறியியல் படிப்பை முடித்திருந்தாலும், தனக்குப் பிடித்த கலைத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினர் வழங்கியே ஆதரவுதான் என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்..

குப்பையாகக் கருதப்படும் பொருட்களைக் கொண்டு பயனுள்ள பொருட்களை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் என்பதே தனது நோக்கம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *