மன்னார்குடி., செப். 22-

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமையை அதிகரிப்பதிலும் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை நடும் நெடும் பணி செப்டம்பர் 24-ந் தேதி நடைபெற உள்ளது.

நாட்டு நலப்பணித் திட்ட தினத்தில் நடைபெறும் இந்தப் பணியில் அரசு துறைகள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

இதன் முன்னோட்டமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி–மதுக்கூர் சாலை பகுதியில் பனை விதைகள் சேகரிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று விதைகளை சேகரித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து, திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைப் பகுதிகளில் 350 கிலோமீட்டர் தொலைவிற்கு பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மன்னார்குடியில் செப்டம்பர் 24-ந் தேதி சுற்றுச்சாலையின் இருபுறங்களிலும் 11 கிலோமீட்டர் தொலைவிற்கு பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளன.

தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனையை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் அதன் வளத்தை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *