கூத்தாநல்லூர்., ஆக.21

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் நாகராஜன் கோட்டகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கான ஆலயம் இல்லாத நிலையில், கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து புதிய ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஸ்ரீ பொன்னியம்மன், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகளுடன் கூடிய ஆலயம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

விழாவையொட்டி முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மறுநாள் காலை யாகசாலை பிரவேசம், கடஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் மகாபூர்ணாஹுதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதியபடி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்களை தலையில் சுமந்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் புனித கடங்கள் ஆலய விமான கோபுரத்தை வந்தடைந்தன.

அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமான கும்பத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னியம்மன், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளிலும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகராஜன் கோட்டகம் மட்டுமின்றி ராமானுஜம், மணலி, ஓகை, பேரையூர், களிமங்கலம், வடபாதிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, நாகராஜன் கோட்டகம் கிராம மக்களிடையே ஆன்மிக மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.