தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் நடைபெற்ற 9-வது சர்வதேச ஹீரோஸ் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்ற கோவை டேக்வாண்டோ அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இரண்டு சிறுவர்கள் மொத்தம் 5 பதக்கங்களை வென்று அசத்தினர்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த சர்வதேச போட்டியில், கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த 7 வயதான விதாந்த் சுரேஷ், ஃபைட்டிங் மற்றும் ஸ்பீட் கிக் பிரிவுகளில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என இரண்டு பதக்கங்களை வென்றார்.

அதேபோல், எட்டு வயதான ரிஷி சந்திரசேகர், ஃபைட்டிங், ஸ்பீட் கிக் மற்றும் பூம்சே ஆகிய பிரிவுகளில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

சர்வதேச போட்டியில் பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய இரண்டு சிறுவர்களுக்கும், கோவை விமான நிலையத்தில் பெற்றோர்,கோவை டேக்வாண்டோ அகாடமி நிர்வாக இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் நிர்மல் ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிறுவர்களின் இந்த சாதனை, கோவை மட்டுமின்றி தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும்,இதற்கு காரணமான கிராண்ட் மாஸ்டர் முத்தப்பா ஹுதேரி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக பயிற்சியாளர் நிர்மல் ராஜ் குமார் தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *