நாகப்பட்டினம்,ஜூன்.9 –
நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி பூச்செரிதல், கஞ்சி வார்த்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கி சிறப்பு பூஜை, அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி தீமிதி உற்சவம் நேற்று முதல் நாள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் குமரகுருபரன், செயலாளர் மரவாடி சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *