நாகப்பட்டினம்,மே.25-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி நெடுஞ்சேரி கிராமத்தில் கஸ்தூரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி பந்தகால் முகூர்த்தம், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மஞ்சள் நீர் தெளித்தல், கரகம், அக்னி கப்பரை வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்று விடையாற்றி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாஸ்கரன், ராக்கப்பெருமாள், முருகன், செந்தில், ஐயப்பன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *