பேராவூரணி, மார்ச்.19 –
பேராவூரணி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 66 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, 177 – பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத் தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியர் டி.கலியமூர்த்தி கண்காணிப்பில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேராவூரணி- தென்னங்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலரான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லாசர் ரெத்தினசாமி, தலைமைக் காவலர் சரளாதேவி, காவலர் பாகம்பிரியாள் ஆகியோர் அடங்கிய குழுவினர், இரவு 11 மணியளவில் அவ்வழியாக சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்பேத்தி பகுதியைச் சேர்ந்த முத்து கருப்பையா என்பதும், அவரிடம் அனுமதி இல்லாமல், சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 66 மது பாட்டில்களும், ரொக்கப் பணம் ரூ.2,230 இருப்பதும் தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த தேர்தல் படையினர் பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முத்து கருப்பையா கள்ளச் சந்தையில் விற்பதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும், எதேச்சையாக தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது.

பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்