திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியான காமராஜபுரம், வட தாரை மற்றும் இறைச்சி மஸ்தான் தெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு காமராஜபுரம் பகுதியில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக சுடுகாடு முழுவதும் புதர் மண்டியும் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமலும் இருந்து வருகிறது. மேலும் இந்த சுடுகாட்டில் இறந்தவர்களுக்கு சில சம்பிரதாய சடங்குகளை செய்வதற்கு தண்ணீர் வசதியோ, மின்சார வசதியோ உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதியும் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை தாராபுரம் நகராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சுடுகாட்டில் புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் அதிக அளவில் உலா வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு எந்த விதமான அடிப்படை வசதியும் சுடுகாட்டுக்கு செய்து தரவில்லை என ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சுடுகாட்டில் இருக்கும் சமாதிக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
