தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அகில இந்திய பொது வேலைநிறுத்தத்
திற்கு ஆதரவாக மதுரையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து மறியல் மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தின.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுதல், மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், அணு மின் உற்பத்தியில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது, காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை கைவிட வேண்டும், விதைகள் சட்டம் 2025-ஐ திரும்பப் பெற வேண்டும், 100 நாள் கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் லெனின், மாநில குழு உறுப்பினர் தெய்வராஜ், மாவட்ட பொருளாளர் லூர்து ரூபி, மாவட்டச் செயலாளர் முருகன் , எம்.எல்.எப் செயலாளர் பி. முத்துக்கிருஷ்ணன், துணைத் தலைவர் எஸ். மகபூப் ஜான், யூ.டி.யூ.சி மாவட்டச் செயலாளர் பி. ஆண்டி, டி.டி.எஸ்.எப் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ். சம்பத், எல்.எல்.எப் நிர்வாகி பூமிநாதன், மக்கள் விடுதலைக் கட்சி தலைவர் சு.க. முருகவேல்ராஜன், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் பேரறிவாளன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் வை. ஜென்னியம்மாள் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். வேல் தேவா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் டேவிட் ராஜதுரை உள்ளிட்ட சுமார் 3,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்க மற்றும் மாணவ வாலிபர் மாதத் அங்கன்வாடி மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
