கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகள் 3, 6, 7, 8,9,10,11, 14, 15 வார்டு பகுதியில் சிறப்பு வார்டு கூட்டம் முதல் கட்டமாக நேற்று நடந்தது.நகர மன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.ஆணையாளர் இரஞ்சிதா,பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளரும்,நகர மன்ற உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து மக்களுக்கான அரசு திட்டங்கள் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டின் வளர்ச்சி பணிகள், அரசின் அனைத்து துறை திட்டங்கள் மற்றும் பயனாளிகளின் விவரம், தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் பராமரிப்பு, மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தல்,தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி மழை நீரை சேகரிக்க வேண்டும். மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் இருக்க தங்களது சுற்றுப்புறத்தில் பயன்பாடற்ற டயர், தொட்டி, ஆட்டுக்கல் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.
நீரினை 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களை கொசுக்கள் முட்டையிடாத வகையில் பாதுகாப்பாக மூடியிட்டு பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பொன்னி, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
