அரூரில், தங்களது நிலத்தை அபகரிக்க தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர் முயற்சிப்பதாக கூறி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் மின்வாரியம் அலுவலகம் எதிரில், மேட்டுப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் அவரது உறவினர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை அரூர் நகராட்சி துணைத் தலைவர் தனபால் அடியாட்களுடன் வந்து அபகரிக்க முயற்சிப்பதாக கூறி, அவரை கண்டித்து கோஷமிட்டபடி, அரூர்–சிந்தல்பாடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து மணிவண்ணன் கூறியதாவது:
எனது தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் கோவிந்தன், மனோகரன், குமார் ஆகியோருக்கு, 3.26 ஏக்கர் நிலத்தை கடந்த, 1986ல் தர்மபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர்களது தாத்தா உத்தண்டி உயில் எழுதினார். இந்நிலையில் எங்களது உறவினரான சேகர் என்பவரிடமிருந்து, 2.79 ஏக்கர் நிலத்தை ஆசை வார்த்தை கூறி, 1997ல் தற்போதைய, அரூர் நகராட்சித் துணைத் தலைவர் தனபால் தனது பெயருக்கு எழுதி வாங்கி விட்டார்.
இந்நிலையில், எங்களது நிலத்தில் உள்ள, 21 சென்ட் நிலம் அவருக்கு சேர்வதாக கூறி, தனபால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, ஆர்.டி.ஓ.,–டி.ஆர்.ஓ., வை மிரட்டி சிட்டா வாங்கினார். இது குறித்து வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, 100க்கும் மேற்பட்ட அடியாட்கள் மற்றும், 7 பொக்லைன் வாகனங்களுடன் வந்த தனபால், எங்களது நிலத்தில் நுழைந்து அபகரிக்க முயற்சித்தார். நாங்கள் தடுத்த போது எங்களை தாக்க முற்பட்டனர். இதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த அரூர் எஸ்.ஐ., உதயகுமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 4:10 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
