தாராபுரம் அருகே சி.எஸ்.ஐ. சர்ச் நிலம் விவகாரம் – சிறுபான்மையினர் உண்ணாவிரதம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூரியநல்லூர் கிராமத்தில், என்.காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்துக்கு சொந்தமான நிலம் அரசால் அபகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து, அப்பகுதியில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் மற்றும் பூர்வ குடியினர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

என்.காஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்த கிறிஸ்துவ மக்களுக்காக வழங்கப்பட்ட நிலம் அளவிடும் பணியில், தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் தாராபுரம் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, சிறுபான்மை மக்கள் மற்றும் விவசாயிகள், “அந்த நிலம் எங்களுக்கு பூர்வீகமாக வழங்கப்பட்டதாகும்; இந்த நிலையில்
சூரியநல்லூர் மற்றும் காதப்புள்ளப்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சிறுபான்மையினர் நிலத்தினை அளவீடு செய்வதை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினர்.

இதையடுத்து, தாராபுரம் கோட்டாட்சியர் மற்றும் திருப்பூர் வருவாய் அதிகாரிகள் மூத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வட்டாட்சியர், “முன்னாள் வட்டாட்சியர் திரவியம் அளவீடு செய்து 2.30 சென்ட் நிலம் சூரியநல்லூர் மற்றும் காதர்புள்ளப்பட்டியில் வசிக்கும் நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.

இந்த முடிவை ரத்து செய்யவும், 1961ஆம் ஆண்டு முதலாக அப்பகுதியில் வசித்து வரும் கிறிஸ்துவ மக்களுக்கு அந்த நிலத்தை பகிர்ந்தளிக்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டக்காரர்கள், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரை கண்டித்து பூர்ணகுடி சிறுபான்மையினர் வசிக்கும் நிலத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குண்டடம் காவல் துறையினர் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்து, குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். அங்கு போலீசார் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தாலும், சிறுபான்மை மக்கள் மற்றும் பொதுமக்கள் “கோரிக்கை நிறைவேறும் வரை உணவு அருந்தமாட்டோம்” என தெரிவித்தனர். இதனால் அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர் பின்னர் இன்று மாலை ஏழு மணியளவில் அவர்களை போலீசார் விடுதலை செய்தாலும், “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சமுதாய நலக்கூடத்தை விட்டு வெளியே வரமாட்டோம்; உண்ணாமல் உறங்காமல் தொடர்ந்த போராட்டம் நடத்துவோம்” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சம்பவம் ஏதும் நடைபெறாதவாறு 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.