ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் :

பகுதிநேர ஆசிரியர்களை அங்கீகரித்து ஆசிரியர் தினத்தில் முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் திமுக தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

15வது கல்விஆண்டிலும் தற்காலிக வேலை மற்றும் தொகுப்பூதியம் என பணிபுரிவதை முதல்வர் தான் முடிவுக்கு கொண்டு வந்து நிரந்தரப்படுத்தி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

12,500 ரூபாய் சம்பளத்தில் இன்றைய விலைவாசியில் அடிப்படை தேவைகளகூட பூர்த்தி செய்ய முடியாமல் கடன் வாங்கி கஷ்டப்படுகின்றார்கள்.

ஆசிரியர்களாக இருந்தாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தனியாக வருகைப்பதிவேடு, சம்பளம் வழங்கும் முறை, மே மாதம் சம்பளம், போனஸ் இல்லாமல் பணிபுரிவது, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு மற்றும் அரசு சலுகைகள் இல்லாதது என அங்கீகாரம் கிடைப்பதில்லை.

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை இந்த கஷ்டத்தில் இருந்து, மீட்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.

2016 சட்டசபை தேர்தலிலும் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக 192, 193வது வாக்குறுதியை கொடுத்துள்ளது.

2021 சட்டசபை தேர்தலிலும் மீண்டும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வதாக 181வது வாக்குறுதியை திமுக கொடுத்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் என திமுக நடத்திய விடியல் தர போறாரு ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடி திமுக ஆட்சிக்கு வந்த 100 நூறு நாளில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என 377வது வாக்குறுதியை திமுக கொடுத்துள்ளது.

10 பத்து ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிந்தால் பணி நிரந்தரம் என 153வது வாக்குறுதியை திமுக கொடுத்துள்ளது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த போதிலும் வாக்குறுதியில் சொன்னபடி 100 நாளில் நிறைவேற்ற வில்லை.

10 ஆண்டு பணி புரிந்தால் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை.

பிரதான முக்கிய வாக்குறுதி 181ன்படியும் இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வில்லை.

எனவே பணி நிரந்தரம் வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் நேரில் கொடுத்தும், தபால் அனுப்பியும் வலியுறுத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள் இறுதியாக போராடி வருகின்றார்கள்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்திய பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையை, இப்போது அனைத்து கட்சிகளும் திமுகவிடமே வைத்து வருகிறது.

முதல்வர் இதை அனைத்தும் கவனத்தில் எடுத்து கொள்வதோடு, திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசின் கொள்கை முடிவாக அறிவித்து இந்த ஆசிரியர் தினத்தில் நிறைவேற்ற வேண்டும்.


S.செந்தில்குமார்

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

செல்: 9487257203