.

கூத்தாநல்லூர்., அக் 13.-

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் அமைந்துள்ள பழமையான ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ் தர்காவின் கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகானாகப் போற்றப்படும் ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ், நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களையும் தனது அருள்பார்வையால் குணப்படுத்தியதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இதனால், இத்தர்காவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தர்காவின் விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், ஹஜ்ரத்துகள் சிறப்புத் துவா ஓதி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, டிரம்ஸ் இசை முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மகானை வழிபட்டனர்.

மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *