கோவை தடாகம் சாலை, கே.என்.ஜி. புதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோயிலில், உலக நலன் வேண்டியும், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் புதிய வகை நோய்களிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும், 15-ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவ விழா அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலரும், மாலை மலர் புகழ் ஜோதிடர் ஞானசேகரன் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், ஒன்பது நாட்களும் காலையில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் நடைபெறுகின்றன.
சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி என்றும், அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. அம்பாள் ஊசிமுனையில் தவமிருந்ததாக ஐதீகம் உள்ள நிலையில், நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனை வழிபடுவதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, பொங்கல் பிரசாதம் தயாரிப்பதற்குத் தேவையான மளிகை பொருட்களை பக்தர்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மனின் நவராத்திரி அலங்காரத்திற்குத் தேவையான மார்புப்பட்டி, நெக்லஸ், பதக்கங்கள், கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்களை வழங்க விரும்பும் பக்தர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து அம்மனின் திருவருளைப் பெறலாம் எனக் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிறப்பு அலங்காரப் பூஜைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து, தங்களது கட்டளையை ஏற்று வழிபாட்டில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 93632 00801, 95004 91801.
