திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், 101-தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 06.10.2026 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (20.09.2026) தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

101-தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான தாராபுரம் அவர்களின் முன்னிலையில், மண்டல அலுவலர்களால் (Zonal Officers) இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பணியாற்றுவதற்காக 384 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 384 வாக்குப்பதிவு அலுவலர்-1, 384 வாக்குப்பதிவு அலுவலர்-2 மற்றும் 384 வாக்குப்பதிவு அலுவலர்-3 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) முறையாகவும் திறம்படவும் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு நேரடி செய்முறைப் பயிற்சி (Hands-on Training) வழங்கப்பட்டது.

பயிற்சியின் நிறைவாக, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களைக் கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில், குறைந்தது ஒரு வேட்பாளருக்கு 5 வாக்குகள் வீதம், 100-க்கும் மேற்பட்ட மாதிரி வாக்குகள் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்டன.

மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் வேட்பாளர் வாரியாக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், கட்டுப்பாட்டு அலகில் (Control Unit) பதிவான வாக்குகள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளுடனும், VVPAT கருவியில் பதிவான வாக்குச்சீட்டுகளுடனும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டன.

இந்தச் சரிபார்ப்பின்போது எவ்வித வேறுபாடும் காணப்படவில்லை. அனைத்து பதிவுகளும் சரியாக இருந்ததாகவும், தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி திருப்திகரமாக இருந்ததாகவும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்,
திருப்பூர் மாவட்டம்.