மன்னார்குடி., செப்–

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மன்னார்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மகாதேவபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்கள் பழமை வாய்ந்த கோவில்களாகும். இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையொட்டி இரு கோவில்களிலும் தனித்தனியாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக பல்வேறு யாக பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நான்காம் கால யாக பூஜைகள் இன்று காலை நடைபெற்றன. தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
- ஶ்ரீ திரௌபதி அம்மன் கோவில்
ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் ஸ்ரீ ராஜவிநாயகர், ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ சுபத்ரா தேவி, ஸ்ரீ தீர்த்தகுல விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராகு கேது, ஸ்ரீ அகோர வீரபத்திரர், ஸ்ரீ முன்னோடியார், ஸ்ரீ கமலகண்ணி, ஸ்ரீ லாடசன்னாசி, ஸ்ரீ நல்லாரிவான், ஸ்ரீ முத்தால் ராவுத், ஸ்ரீ நடுகல் சூலம், ஸ்ரீ பலிபீடம், ஸ்ரீ துவார சக்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஶ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்
அதேபோல் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ வள்ளி–தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ கழுவுடையான், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ பலிபீடம், ஸ்ரீ துவார சக்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது.
- ஶ்ரீ வல்லப விநாயகர் கோவிலிலும் கும்பாபிஷேகம்
இதேபோல் மன்னார்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வல்லப விநாயகரை தரிசனம் செய்தனர்.
மகாதேவபட்டினத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களிலும், மன்னார்குடி வ.உ.சி. சாலையில் உள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலிலும் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டதால் விழா சிறப்பாக நடைபெற்றது.
