நீடாமங்கலம்., செப்.10

டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர் . இந்த நிலையில், சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது தொடர்ந்து, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது .

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு போக சாகுபடி செய்வதற்கு நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதில் வெண்ணாறுக்கு 598 கன அடி , பாமணியாறுக்கு 179 கன அடி , கோரையாறு 434 கன அடி என, மொத்தம் 1200 கன அடி வீதம் நீர் வளத்துறை அதிகாரிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர் .