முன்னாள் நலவாரிய தலைவர் பொன்.குமார் மன்னார்குடி நடைபெற்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கத்தின் கூட்டத்தில் வலியுறுத்தல்

மன்னார்குடி., செப்.09

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கத்தின் தொகுதி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி தலைவர் வி.காசிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கே.ராஜு வரவேற்றார். பொருளாளர் பி.பாலாஜி, துணை செயலாளர் டி.முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நிறுவனத் தலைவரும், முன்னாள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான பொன்.குமார் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாநில செயலாளர் எஸ்.எம்.குமார், மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஜெயராமன், பொதுச் செயலாளர் ஜெக.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.குமார் கூறியதாவது:

ரியல் எஸ்டேட் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இத்துறையை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் அடையாள அட்டை வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியத்தில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களையும் 55-வது பிரிவாக இணைத்து, அவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்கவும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் ‘வெற்றி வீடு’ திட்டத்திற்கான நிதியுதவியை ரூ.5 லட்சமாக உயர்த்திய முதலமைச்சரின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என்றார்.