மன்னார்குடி., ஆக.24

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தேரி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நான்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின் மோட்டார்கள் மூலம் காலை நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். குடிநீருக்காக சுடுகாட்டில் ஈமச்சடங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்று காலை மன்னார்குடி–முத்துப்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து, தங்கள் பகுதியில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், பழுதடைந்துள்ள குடிநீர் நீரேற்றும் மின் மோட்டார்களை சீரமைத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம், கிராமத்தில் உள்ள நீரேற்றும் மின் மோட்டார்களை புதுப்பித்து குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தேரி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.