மன்னார்குடி., ஆக 24

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளை திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் என பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

ஆண்களுக்கான போட்டிகளில் 53 கிலோ முதல் 120 கிலோ வரையிலான எடைப்பிரிவுகளிலும், பெண்களுக்கான போட்டிகளில் 43 கிலோ முதல் 84 கிலோ வரையிலான எடைப்பிரிவுகளிலும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் அதிக எடையை தூக்கி தங்களது உடல் வலிமையை நிரூபித்தனர். பெண்கள் பிரிவிலும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றது.

ஆண்கள் பிரிவில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளின் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் RRP உடற்பயிற்சி மையம் முதலிடத்தையும், பென்டாஸ்டிக் பவர் எக்ஸ் உடற்பயிற்சி மையம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் திருவாரூர் A2B பிட்னஸ் முதலிடத்தையும், மன்னார்குடி பான்கர் கேஸ் கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்க காப்பாளர் மீனாட்சி சூர்யா பிரகாஷ் மற்றும் திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் சங்க பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ராமு மற்றும் திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் எஸ். விமல் ராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட பளுதூக்கும் சங்கத் தலைவர் எஸ். ராமதாஸ், திருவாரூர் மாவட்ட அமெச்சூர் மற்றும் பிட்னஸ் அசோசியேஷன் தலைவர் ஏ.எஸ். அசோகன், மாவட்ட வலுதூக்கும் சங்க காப்பாளர் மீனாட்சி சூர்யா பிரகாஷ், செயலாளர் எஸ். விமல் ராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் அமெச்சூர் பிட்னஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்தகைய போட்டிகள் மூலம் இளம் தலைமுறையினரிடையே உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் வலுதூக்கும் விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரிக்கும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.