சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் 3 நாட்களாக எரியும் தீ: நடவடிக்கை எடுக்காத ஆணையரை கண்டித்து சாலை மறியல்


சீர்காழி, ஜூலை 1:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.


இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு எதிர்பாராத விதமாக குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி குப்பைக் கிடங்கின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அருகிலுள்ள கோவிந்தராஜ் நகர், ஈசானியத் தெரு, பிச்சைக்காரன் விடுதி, மனவெளி திடல், சர்க்கார் தெரு, கோயில் சேர்த்தி, கே.பி.எஸ். நகர், அருந்ததியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.


இந்த நிலையில், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் பொறியாளர் மார்க்கோனி தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், நகர அதிமுக பொருளாளர் செந்தில்குமார், மதிவாணன் உள்ளிட்டோர் குப்பைக் கிடங்கிற்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது நகராட்சி ஆணையர் சசிகுமார், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என தெரிவித்ததால், அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதையடுத்து, போராட்டக்காரர்கள் சீர்காழி–புளிச்சக்காடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று நாட்களாக எரிந்து வரும் குப்பையை அணைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும், குப்பைக் கிடங்கில் எரியும் தீயை முழுமையாக அணைக்க வேண்டும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், நகராட்சி ஆணையர் சசிகுமார் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தீயை முழுமையாக அணைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.


இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி–புளிச்சக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.