தாராபுரம் பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பிலான 123 மெட்ரிக் டன் நெல் விதைகளுக்கு, விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட விதை நெல் உற்பத்தி நிறுவனங்களும், 130-க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விதைக்காக பயிரிடப்படும் நெல் விதை பண்ணைகளில் இருந்து வரும் விதைகளை, தாராபுரம் பகுதியில் உள்ள விதை உற்பத்தி நிறுவனங்களில் உரிய சுத்திகரிப்பு மற்றும் முறையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, விதை நெல்லாக விற்பனைக்குத் தயாராகிறது.

இங்கு ஆண்டுதோறும் சுமார் 75,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் சுத்திகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விதைப்புக்காக அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் மிதமான காற்று போன்றவை விதைகள் உரிய ஈரப்பதத்தை அடைவதற்கும், விதைகள் தூற்றுவதற்கும் ஏதுவாக இயற்கையாகவே அமையப்பெற்று இருக்கிறது.

இந்நிலையில் எதிர்வரும் சம்பா பருவ நெல் சாகுபடிக்காக விதை நெல் உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில், ஆய்வு மேற்கொள்வதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

கோவை விதை ஆய்வு துணை இயக்குநர் (பொறுப்பு) பெ.சுமதி தலைமையில் கோவை, அன்னூர், உடுமலை, தாராபுரம், பவானி, ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், காங்கயம் ஆகிய பகுதிகளில் உள்ள விதை ஆய்வு அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர், தாராபுரம் பகுதியில் உள்ள 9 விதை உற்பத்தி நிறுவனங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது விதிமீறல் காணப்பட்ட 13 விதைக் குவியல்களுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டது. இதன் அளவு 123.15 மெட்ரிக் டன் ஆகும். இதன் மதிப்பு ரூ.49.24 லட்சம் ஆகும்.

இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் பெ.சுமதி கூறியபோது, விதை உற்பத்தியாளர்கள் விதை சட்டங்களின்படி முறையான விதை உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொள்ள வேண்டும். உற்பத்தியாளர்கள் உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்யும் போது விதைகளை விவசாயிகளிடம் பெறப்பட்ட பட்டியல். சுத்திகரிப்பு மற்றும் உண்மை நிலை அட்டைப் பொருந்திய பதிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும். மேற்கண்ட விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *