திருவாரூர்., ஜூன்.01

திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்கம்பிகள் திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றன. பல இடங்களில் மின்சார கம்பிகள் தரம் குறைந்து உடைந்து விடும் நிலையில் உள்ளது.

இது மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்த போதிலும், ஆபத்தான கீழே அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகளை மாற்றாமல், சேதமடைந்த மின்கம்பிகளை கொக்கி முறையில் இணைத்து கட்டப்பட்டு உள்ளன.

இதனால் அந்த சேதமடைந்த மின்கம்பிகள் எப்போது அறுந்து விழுந்து, தீப்பிடித்து எரியுமோ என பொதுமக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த நிலை உள்ள நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தண்டலை ஊராட்சிக்குட்பட்ட மேமங்கலம் பகுதியில் வீடுகளுக்கு குறுக்காக தாழ்வழுத்த மின் கம்பிகள் செல்கின்றன.

அவ்வாறு செல்லும் மின்கம்பிகள் பல இடங்களில் சேதம் அடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த மின்கம்பிகளை மாற்றி தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் மின்சாரத்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர். கோடை காலம் என்பதாலும், காற்று அதிகமாக அடிப்பதாலும் பல இடங்களிலும் மின்சார கம்பிகள் உரசி தீப்பிடிக்கும் சூழல் அபாயம் உள்ளதால் மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக இந்த கம்பிகளை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பிகளை போட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *